கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஐடி நிறுவனமான கோவை.கோ (Kovai.co), தங்களின் 140 ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.14.5 கோடி போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது. 'ஒன்றாக நாம் வளர்கிறோம்' (Together We Grow) என்ற திட்டத்தின் கீழ், 2022 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்பு நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும், மூன்று ஆண்டுகள் சேவையை முடித்தவுடன், தங்களின் மொத்த ஆண்டு சம்பளத்தின் 50% போனஸாக பெறுவார்கள். முதல் கட்டமாக, 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜனவரி 31 அன்று தங்களின் மாத ஊதியத்துடன் போனஸைப் பெற்றுள்ளனர்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சரவணகுமார், "நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஊழியர்களுடன் நிறுவனத்தின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிப்பது என் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. நாங்கள் பணமாகவே போனஸை வழங்கத் தீர்மானித்தோம், எங்கள் பணியாளர்கள் அதை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். வங்கிக் கடனை அடைப்பதற்கும், வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும், அல்லது அவர்களின் தேவைக்கேற்ப முதலீடு செய்ய இதைப் பயன்படுத்தலாம்," எனக் குறிப்பிட்டார்.
கோவை.கோ நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் 16 மில்லியன் டாலர் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளது. இது B2B SaaS (Software as a Service) ஐடி நிறுவனமாகும், இதன் BizTalk360, Document360, மற்றும் Turbo360 ஆகிய மூன்று முக்கிய சேவைகள் உலகளவில் 2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவனத்துக்கு லண்டன், சென்னை, மற்றும் கோயம்புத்தூரில் அலுவலகங்கள் உள்ளன, மொத்தம் 260க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment